» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நயினார் நாகேந்திரன் மருத்துவக் கல்லூரி விண்ணப்ப ஆதாரம் என்னிடம் உள்ளது: செங்கோட்டையன்

திங்கள் 29, ஜூன் 2026 8:52:04 AM (IST)



பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகத் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை செல்வதற்காகக் கோவை வான்வழி நிலையம் வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: குதிரை பேரம் என்பது வார்த்தை ஜாலம் தானே தவிர, வேறு எதுவும் இல்லை. நான் 6 மாதங்களுக்கு முன்பு பதவியை ராஜிநாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்தேன். தற்போது அமைச்சராக இருக்கிறேன். ஒரு இயக்கம் நல்ல முறையில் செயல்படும்போது, யார் வேண்டுமானாலும் அங்கு இணையலாம். 

அதைப் பயன்படுத்திக்கொண்டு எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்கின்றனர். பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். ஆனால், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து இப்போது கூற முடியாது. அந்தச் சூழலைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும்.

அரசின் செயல்பாடுகள் சினிமா பாணியில் உள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அவர் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் அளிக்க முடியாது. கருத்து தெரிவிப்பது என்பது வேறு, எதை வேண்டுமானாலும் கொச்சைப்படுத்திப் பேசுவது வேறு. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது எந்த இடையூறும் ஏற்படுத்தப்படவில்லை. 

முதல்வர் பேச வேண்டும் என்று கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தவர்கள், அவர் பேசத் தொடங்கியதும் ஏன் வெளியேறினர்? மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியினர் எந்தக் கேள்வியும் கேட்பார்கள். நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே முதல்வர் ஜோசப் விஜய்யின் நோக்கம். நிதித்துறையில் மட்டும்தான் வெள்ளை அறிக்கை விடுவார்கள். வருவாய்த்துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை. அந்தத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மருத்துவக் கல்லூரி விண்ணப்ப விவகாரம் குறித்து நான் நிரூபித்தால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அந்தக் கட்சியில் பதவி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். நயினார் நாகேந்திரன் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்பம் கொடுத்தாரா, இல்லையா என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அடுத்த செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆதாரத்தை நேரடியாகக் காட்டுவேன்.

கோவை வான்வழி நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. வான்வழி நிலைய விரிவாக்கத்திற்கு இன்னும் 10 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. சேலம் வான்வழி நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஓசூரில் வான்வழி நிலையம் அமைக்க மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

மந்தை புறம்போக்கு உள்ளிட்ட பல்வேறு வகை நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் திட்டங்கள் தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மேக்கேதாட்டு விவகாரத்தில் எதிராக முதல்வர் ஜோசப் விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory