» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு!
சனி 16, ஆகஸ்ட் 2025 9:06:34 AM (IST)
குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரிக்கை ஒலி எழுப்பி அப்புறப்படுத்தினர்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை குற்றாலம் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
காலை 10 மணி வரை மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அபாய எச்சரிக்கையை ஒலிக்கச் செய்து சுற்றுலா பயணிகள் அனைவரையும் அருவி கரையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் அப்புறப்படுத்தப்பட்ட சிறிது நேரத்தில் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கும் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.
நேற்று சுதந்திர தினம் என்பதால் விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் புலியருவி, சிற்றருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம், புளியரை, செங்கோட்டை, வல்லம், இளஞ்சி, ஆயிரப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை மிதமான மழை பெய்தது. தென்காசியில் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இன்றும், நாளையும் தொடர் விடுமுறை என்பதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. காலை 7.30 மணி அளவில் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. காலை 10 மணி வரை பரவலாக மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கொட்டும் மழைக்கு இடையே சுதந்திர தினவிழா நடைபெற்றது.
இதனால் ஒரு சில கலைநிகழ்ச்சிகள் மட்டும் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் பெய்த மழை நிலவரம் பின்வருமாறு:- சேரன்மாதேவி -1 மி.மீ, மணிமுத்தாறு -1, நெல்லை -3.40, பாளையங்கோட்டை -1.40, பாபநாசம் -10 மி.மீ.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:14:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)
