» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் 831 ஊரக குடியிருப்புகளுக்கு நடைபெற்று வரும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (02.09.2025) திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர், இராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு , மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் இராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 கிராமங்களுக்குட்பட்ட சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், ரூ.605 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து மேலமுன்னீர்பள்ளம் பகுதியில் தண்ணீர் எடுக்கப்பட்டு, சிங்கிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதற்காக 297 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மேலும், பிரண்டமலை பகுதிக்கும் தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது.

இன்னும் இரண்டு வார காலத்திற்குள், பிரண்டமலையிலிருந்து தெற்கு வள்ளியூரில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிற்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படவுள்ளது. மீதமுள்ள அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்படும். அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் வழங்கப்படும் என துறைசார்ந்த அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்துள்ளனர் என தெரிவித்தார். ஆய்வின்போது, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமலெட்சுமி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory